பாடத்திட்டம் | Syllabus & Course

பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் கல்வி ஆலோசனைக்குழு
தமிழக அரசு அனுமதி பெற்று, பாரம்பரிய தமிழ் இலக்கிய அறிவையும் நவீன தொழில்நுட்ப வழிக் கல்வி நெறிமுறைகளையும் ஒருங்கிணைத்து உலகெங்கிலும் உள்ள தமிழ் ஆர்வலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட மாபெரும் கல்வி முன்னெடுப்பு.
பாடத்தின் தரநிலை விளக்கம் (Credit Calculation System)
வாகை தமிழ்ச்சங்கத்தின் மூலம் நிகழ்த்தப்படும் பாடத்திட்டமானது, பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grant Commission) தொழில்நுட்பம் சாரா முதுகலை பட்டப்படிப்புகளுக்கான (Non - Technology PG Courses), மிகப்பெரிய திறந்தநிலை இணையப் படிப்புகளின் (MOOC) பாட மேம்பாடு மற்றும் வழங்கல் குறித்த வழிகாட்டுதல் கையேட்டின் (Instruction Manual) அடிப்படைக் கோட்பாடுகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயர்தரமான கல்வி உள்ளடக்கங்கள், முறையான மதிப்பீட்டு முறைகள் மற்றும் கற்பித்தல் நெறிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, மாணவர்களுக்கு ஒரு தரமான மின்கற்றல் அனுபவத்தை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்கள்:
நான்கு முனை அணுகுமுறை (4-Quadrant Framework) - அறிமுகம்
13-ஆம் நூற்றாண்டில் பவணந்தி முனிவரால் இயற்றப்பட்ட நன்னூல், தொல்காப்பியத்திற்கு அடுத்தபடியாகத் தமிழின் சிறந்த இலக்கண நூலாகத் திகழ்கிறது. மாணவர்கள் பாடங்களை எவ்வாறு ஆழமாகக் கற்க வேண்டும் மற்றும் சக மாணவர்களுடன் கலந்துரையாடி முழுமையான அறிவைப் பெறுவது எப்படி என்பதை இந்தப் பாடல் விளக்குகிறது.
"ஒருகுறி கேட்போன் இருகாற் கேட்பின் பெருக நூலில் பிழைபா டிலனே. முக்காற் கேட்பின் முறையறிந் துரைக்கும். ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால் கூறல்லது பற்றல னாகும். அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகால், செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்புடைத் தாகும்."
மேலே உள்ள நன்னூல் பாடல் தரமான கற்றல் மற்றும் கற்பித்தல் முறையை மிக அழகாக விளக்குகின்றன. ஒரு பாடத்தை ஒருமுறை கேட்ட மாணவன், அதனை மீண்டும் ஒருமுறை (இரண்டாம் முறை) கேட்டால் பாடத்தில் பிழை இல்லாமல் தெளிவு பெறுவான். மூன்றாம் முறை கேட்டால் அந்தப் பாடத்தை மற்றவர்களுக்கு முறையாக விளக்கும் திறனைப் பெறுவான். ஆசிரியர் சொல்லிக்கொடுக்கும் போது ஒரு மாணவன் முழுமையாகக் கவனித்தாலும், அவனால் கால் பங்கு (25%) அறிவை மட்டுமே முதன்முறையில் பெற முடியும். மீதமுள்ள அறிவை சக மாணவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலமும், மீண்டும் மீண்டும் கற்பதன் மூலமும் மட்டுமே பெற முடியும் என்கிறது நன்னூல்.
இந்திய அரசின் கல்வி அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு (University Grant Commission) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த 'நான்கு முனை அணுகுமுறை' என்பது இணையவழிக் கல்வியை வெறும் காணொளிகளாக மட்டும் சுருக்கிவிடாமல், ஒரு முழுமையான வகுப்பறை அனுபவத்தை இணையவழியில் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தரப்படுத்தப்பட்ட கட்டமைப்பாகும். இதன் முக்கிய நோக்கம், கற்றலை ஆசிரியர் கற்பித்தல் (Quadrant I), சுய வாசிப்பு (Quadrant II), கலந்துரையாடல் (Quadrant III) மற்றும் மதிப்பீடு (Quadrant IV) என நான்கு நிலைகளில் சமமாகப் பிரிப்பதன் மூலம் மாணவர்களுக்கு ஒரு விரிவான கல்விச் சூழலை உருவாக்குவதாகும்.
இது கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு மாணவர் ஆன்லைனில் செலவிடும் நேரத்தை அதிகாரப்பூர்வமான ‘கல்வி வரவுகளாக' (Academic Credits) மாற்ற வழிவகை செய்கிறது. இம்முறை மாணவர்களின் கவனிக்கும் திறன், வாசிக்கும் பழக்கம், சமூகக் கலந்துரையாடல் மற்றும் சுய-மதிப்பீடு ஆகிய நான்கு முக்கியக் கற்றல் திறன்களையும் ஒருங்கிணைத்து, இணையவழிக் கல்வியை ஒரு முறையான பட்டயப் படிப்பிற்கு இணையான அங்கீகாரத்தைப் பெறச் செய்கிறது.

தர மதிப்பீட்டு நிலை விளக்க வரைபடம் தமிழின் மிகப்பழமையான நூல்களுள் ஒன்றான நன்னூலில் கூறப்பட்டுள்ள பாடங்கேட்டலின் முறைகள், இன்றைய பல்கலைக்கழக மானியக் குழுவின் நான்கு முனை ( 4-Quadrant ) இணையவழிக் கற்றல் முறையோடு நேரடியாகத் தொடர்புடையது.
பாரம்பரியக் கற்றல் நுட்பங்களும் நவீன மின்-கற்றல் தொழில்நுட்பத்தின் இணைப்பும்

ஐக்கிய நாடுகள் சபையின் வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்
இலக்கு 4: தரமான கல்வி (Quality Education)
அனைவருக்கும் உள்ளடக்கிய, சமமான மற்றும் தரமான கல்வியை உறுதி செய்வதோடு, வாழ்நாள் முழுவதற்குமான கற்றல் வாய்ப்புகளை உருவாக்குவது.
இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission) பரிந்துரைக்கும் நான்கு நிலைகள் (4 – Quadrant) கொண்ட நவீன கற்றல் முறையைத் தமிழ் மொழி வழிக் கல்வியில் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது வாகை தமிழ்ச்சங்கம். தற்காலக் கல்விச்சூழலில் மற்ற தரம் வாய்ந்த இணையவழிக் கற்றல் தளங்கள் பல இருந்தாலும், அவை பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது பிற மொழிகளிலேயே பாடங்களை வழங்குகின்றன. பிற தளங்களில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு குறித்த ஆழமான பாடத்திட்டங்கள் மிகக் குறைவாகவே உள்ளன.
இந்த மிகப்பெரிய இடைவெளியை நிரப்பும் நோக்குடன், வாகை தமிழ்ச்சங்கம் காணொலி விரிவுரைகள் (e Tutorial), மின்னணு பாடக்குறிப்புகள் (e Content), கலந்துரையாடல் களங்கள் (Discussion Forum), அக மற்றும் புற மதிப்பீட்டுத் தேர்வுகள் (Self-Assessment) ஆகிய நான்கு நிலைகளையும் உள்ளடக்கி, மாணவர்களுக்கு ஒரு முழுமையான கற்றல் அனுபவத்தை வழங்குகிறது. இது வெறும் தகவல் பரிமாற்றமாக மட்டும் இல்லாமல், தொழில்நுட்ப உதவியுடன் தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லும் முயற்சியாகத் திகழ்கிறது.
"கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றைய வை"
— திருக்குறள் 400
அழியாத செல்வமான கல்வியை எளிய முறையில் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே இந்த இலக்கின் மையக்கருத்தாகும். வாகை தமிழ்ச்சங்கம் நவீனக் கற்றல் மேலாண்மை அமைப்பின் உதவியுடன், சங்க இலக்கியங்கள் முதல் இன்றைய காலத்திற்குத் தேவையான நவீனத் தொழில்நுட்ப பாடங்கள் வரை வழங்குகிறது.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் நமது பாரம்பரிய பண்பாடு மற்றும் நவீன அறிவியலை தடையின்றி கொண்டு சேர்ப்பதே வாகை தமிழசங்கம் இணையவழி வகுப்புகளை நடத்துவதன் முக்கிய நோக்கமாகும். இதன் மூலம் வயது, காலம், நேரம் மற்றும் பிற கட்டுப்பாடுகள் இன்றி, அனைவரும் தங்கள் இருப்பிடத்திலிருந்தே உலகத்தரம் வாய்ந்த கல்வி மற்றும் திறன்களைப் பெற முடிகிறது; மேலும், வயது வரம்பின்றி அனைவரும் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும், அக்கல்விக்கான சான்றிதழ்களை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து தங்களின் திறன் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இது ஒரு சிறந்த பாலமாக அமைகிறது.
முக்கிய விதிமுறைகள் (Rules & Regulations)
அனைத்து வகுப்புகளும் இணையவழியில் நடைபெறும். பாடங்கள் பதிவு செய்யப்பட்ட காணொளிகளாக வாராந்திர அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் கற்றல் மேலாண்மை தளத்தில் வெளியிடப்படும்.
மாணாக்கர்கள், காணொளிகளைப் பார்த்தபின்னர் செயலியில் பகிரப்படும் அகமதிப்பீட்டுத் தேர்வுகளையும் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் நிறைவுசெய்திருக்க வேண்டும்.
வகுப்புகள் யாவும் இணையவழியில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடைபெறுகிறது. வகுப்புகளில் இணைவதற்கு வயதுவரம்பு இல்லை.
தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே சான்றிதழ்கள் வழங்கப்படும். அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் (NCS Portal) திறன் சான்றிதழாகப் பதிவுசெய்து கொள்ளலாம்.
கருத்தியல் வகுப்புகள் மற்றும் தேர்வுகள் யாவும் இணையவழியில் நடைபெறும். தேர்ச்சிபெற்ற பின்னர் பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்கள் நேரடி நிகழ்வின்போது வழங்கப்படும்.
ஒரே கல்விநிறுவனம் / அமைப்பு / பகுதியிலிருந்து அதிகப்படியான பங்கேற்பாளர்கள் இணையும் பட்சத்தில் அவர்களுக்குக் கட்டணச் சலுகையும் வழங்கப்படும்.
பயிற்றுமொழி மற்றும் சேர்க்கை விவரங்கள்
பயிற்றுமொழி
தமிழ், ஆங்கிலம் (வகுப்புகளுக்கேற்ப)
சேர்க்கைக்கான நிபந்தனை
ஆர்வமுள்ள அனைவரும் இணையலாம். வயதுவரம்பு இல்லை.
அடிப்படைத் தமிழ் படிக்க மற்றும் எழுதத் தெரிந்திருத்தல் வேண்டும்.
தேர்ச்சி நிலை மற்றும் மதிப்பீட்டு விவரங்கள்
மதிப்பெண் மற்றும் தகுதிக்கான தேர்ச்சிநிலை விவரங்கள்

அகமதிப்பீட்டுத் தேர்வு (Internal Exam)
அகமதிப்பீட்டுத் தேர்வு, இணையவழியில் தெரிவு செய் முறைப்படி (Multiple Choice based Google Form test) நடைபெறும். மூன்று அகமதிப்பீட்டுத்தேர்வுகள் நடத்தப்படும். பங்கேற்பாளர்களின் சிறந்த இரண்டு தேர்வுகளின் மதிப்பெண்களானது, அகமதிப்பீட்டுப் பணிகளுக்காக கணக்கிற்கொள்ளப்படும்.
வினாவானது, பலவுள் சிறந்த அல்லது மிகப் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எனும் பொருண்மையில், சரியானதைத் தேர்ந்தெடுக்க / கூற்று, காரணம் / சரியா, தவறா / கோடிட்ட இடங்களை நிரப்புக / படத்தைப் பார்த்து தேர்ந்தெடுக்க என ஏதேனும் ஒரு வடிவில் அமைந்திருக்கலாம்.
வினாத்தாள் வடிவங்கள் (Question Patterns)

செய்முறைத்தேர்வு (Practical Exam)
மாணாக்கர்கள் பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒரு தலைப்பினையோ அல்லது பாடம் சார்ந்த ஆய்வு தொடர்பான ஏதேனும் ஒரு தலைப்பினையோ தேர்ந்தெடுத்து 15 நிமிடங்களுக்குள் விளக்கவுரையாற்ற வேண்டும். செய்முறைத்தேர்விற்கெனத் தனியாக அட்டவணை கிடையாது. அந்தந்த வகுப்புகளுக்குப் பயிற்றுநர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதலின் படி தேர்வு நடைபெறும் பங்கேற்பாளர் வகுப்பு நேரத்தில் இணைப்பில் இணைந்து உரையாற்றலாம். அப்பணி, பயிற்றுநரால் பின்வருமாறு மதிப்பிடப்படும்.

இறுதித்தேர்வு (Final Exam)
தேர்வு அட்டவணையின்படி, அந்தந்த நாளுக்கான வினாத்தாள் பங்கேற்பாளர்களுக்கு குழுவில் பகிரப்படும். பங்கேற்பாளர் A4 வடிவிலான தாளில் எழுதி அதனை கொடுக்கப்படும் படிவங்களுடன் அஞ்சல் அனுப்பவேண்டும். படிவங்கள் மற்றும் அஞ்சல் அனுப்பவேண்டிய விவரங்கள் தேர்வின்போது பகிரப்படும். கொடுக்கப்படும் கால அளவிற்குள் அஞ்சல் கிடைக்கப்பெறவேண்டும். இல்லையென்றாலும், வகுப்புகளுக்கான கட்டணம் செலுத்தாதவர்கள் மற்றும் களப்பணி மேற்கொள்ளாதவர்களின் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படாது.
தேர்விற்கு A4 அளவிலான தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாள்களின் இருபுறமும் விடைகளை எழுதலாம். விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கை அதிகபட்சமாக 30 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.
பகுதி ஆ குறுவினாக்களுக்கான ஒவ்வொரு வினாவிற்கும் அதிகபட்சம் அரைப்பக்கத்திற்குள்ளும், பகுதி இ ஆய்வு அடிப்படையிலான விடைகள் ஒவ்வொன்றிற்கும் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு பக்கத்திற்குள்ளும் அமைதல் வேண்டும்.
விடைத்தாள்களை ஒட்டுமொத்தமாகப் பிணைப்பு வைத்து இணைக்கும் போது, மேல், நடு மற்றும் கீழ் என மூன்று இடங்களில் சரியாகத் தைக்க/இணைக்க வேண்டும். படிவங்களை விடைத்தாள்களுடன் சேர்த்துத் தைக்கக் கூடாது.
அஞ்சல் உறையில், விடைத்தாளுடன் படிவம் 1, 2 மற்றும் 3 பூர்த்திசெய்து சேர்க்க வேண்டும். அத்துடன் தேர்வரின் அடையாளச் சான்று (ஆதார் / கல்லூரி ஐடி) நகலையும் சுய கையொப்பமிட்டு இணைக்க வேண்டும். படிவங்களை பிணைக்காமல் உறையினுள் அப்படியே வைக்கவும்.
விடைத்தாள்களை மடிக்காமல் அனுப்ப A4 அல்லது Legal அளவுள்ள தபால் உறையை மட்டுமே பயன்படுத்தவும். தபால் உறையின் மேல் படிவம் 4-ஐ பூர்த்திசெய்து ஒட்டி அனுப்ப வேண்டும். படிவம் 1 மற்றும் 2-இல் கட்டாயம் புகைப்படம் ஒட்டியிருக்க வேண்டும்.
தேர்வர் ஒன்றுக்கும் மேற்பட்ட வகுப்புகளில் இணைந்திருந்தால், அவ்வனைத்து விடைத்தாள்களையும் ஒரே உறையில் வைத்து அஞ்சல் அனுப்பலாம். எனினும், படிவங்கள் தனித்தனியே பூர்த்திசெய்திருத்தல் கட்டாயமாகும்.
ஒட்டுமொத்த மதிப்பெண்கள் (Total Marks: 120)

புளூமின் வகைப்பாடு மற்றும் நன்னூல் கற்றல் நிலைகள்
பவணந்தி முனிவரால் கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நன்னூல், தமிழ் மொழியின் மிகச்சிறந்த இலக்கண நூல்களில் ஒன்றாகும். மொழியின் விதிகளைத் தாண்டி, ஒரு நல்லாசிரியர் மற்றும் நல்ல மாணாக்கருக்கான இலக்கணங்களையும், கற்கும் முறைகளையும் இந்நூல் ‘பாயிரம்’ என்னும் பகுதியில் மிக விரிவாக எடுத்துரைக்கிறது.
பெஞ்சமின் புளூம் என்பவரால் 1956-இல் உருவாக்கப்பட்ட இந்த வகைப்பாட்டியல், கற்றல் செயல்முறையை ஆறு நிலைகளாகப் பிரிக்கிறது. நினைவில் இருத்துதல், புரிதல், பயன்பாடு, பகுப்பாய்வு, மதிப்பீடு மற்றும் உருவாக்கம் ஆகிய நிலைகளின் மூலம் ஒரு மாணவனின் சிந்திக்கும் திறனை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். நவீன கல்வி முறையில் வினாத்தாள்கள் தயாரிக்க இது ஒரு முக்கிய அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது.
"நூல்பயில் இயல்பே நுவலின் வழக்கறிதல் பாடம் போற்றல் கேட்டவை நினைத்தல் ஆசாற் சார்ந்தவை அமைவரக் கேட்டல் அம்மாண் புடையோர் தம்மொடு பயிறல் வினாதல் வினாயவை விடுத்தல் என்றிவை கடனாக் கொளினே மடம்நனி இகக்கும்"
வாகை தமிழ்சங்கம் வினாத்தாள்களைத் தயாரிக்கும்போது, நன்னூல் காட்டும் கற்கும் நெறிகளையும் புளூமின் அறிவுசார் நிலைகளையும் மிகச்சரியாகப் பொருத்துகிறது.
Bloom's Cognitive Taxonomy vs Nannool's Learning Stages

மாணாக்கர்கள் சான்றிதழ் பெற வேண்டிய தகுதிகள்:
நிபந்தனை 1
மூன்று அகமதிப்பீட்டுத் தேர்வுகளில் ஏதேனும் ஒன்றிலாவது பங்கேற்றிருக்க வேண்டும்.
நிபந்தனை 2
இறுதித்தேர்வினை கட்டாயம் எழுதி, வெற்றிகரமாக சமர்ப்பித்திருக்க வேண்டும்.
நிபந்தனை 3
ஒருங்கிணைந்த மதிப்பெண்களில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
பாடத்திட்டம், மதிப்பீடு மற்றும் கல்வி ஆலோசனைக்குழு

முனைவர். சீ. வசந்தி
கண்காணிப்பாளர் / ஆணையாளர் (பொ) & (ப.நி.)
தொல்லியல்துறை, தமிழ்நாடு அரசு, சென்னை.

முனைவர். சி. தியாகராஜன்
பதிவாளர் (பொ) (மு)
தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

திரு. மா. மனோஜ்குமார்
நிறுவனர் & தலைவர்
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

முனைவர். வெ. பாலசரசுவதி
கௌரவ விரிவுரையாளர் / தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி, கோவை.

தமிழ்மிகு. விஜயசாமுண்டீஸ்வரி
தமிழ் ஆர்வலர் & மாணவி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

முனைவர். சு. சத்தியா
தமிழ்துறைத் தலைவர்
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, தஞ்சாவூர்.

முனைவர். ம.கவிதா
தமிழ்த்துறைத்தலைவர்
விவேகானந்தா கலை & அறிவியல் மகளிர் கல்லூரி, திருச்செங்கோடு.

முனைவர். பெ. முருகன்
உதவிப் பேராசிரியர் / தொல்லியல் துறை
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

தமிழ்மிகு. மூ. இராமலெட்சுமி
இடைநிலை ஆசிரியர்
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மதுரை.

முனைவர். ஜெ. புவனேஸ்வரி
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை
தேசியக்கல்லூரி (தன்னாட்சி), திருச்சி.

முனைவர். சு. கனிமொழி சுகுணா
உதவி பேராசிரியர், கணினி அறிவியல் துறை
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், ராமாபுரம்.

திரு. நா. கனகராஜ்
முதுநிலைப் பள்ளித் தமிழாசிரியர்
பசும்பொன் தேவர் மேல்நிலைப் பள்ளி மம்சாபுரம், விருதுநகர் மாவட்டம்.

தமிழ்மிகு. கா. விசயநரசிம்மன்
துணைப்பேராசிரியர் / இயற்பியல், மாந்தவியல் & அறிவியல் துறை
ராஜலட்சுமி பொறியியல் கல்லூரி (தன்னாட்சி), தண்டலம், சென்னை.

திரு. அ. கார்த்திகேயன்
பொறுப்பாளர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

செல்வி. செ.ச.நிவேதா
பொறுப்பாளர், பாடத்திட்டம் மதிப்பீடு மற்றும் கல்வி ஆலோசனைக்குழு
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

செல்வி. கா. நாவரசி
பொறுப்பாளர், பாடத்திட்டம் மதிப்பீடு மற்றும் கல்வி ஆலோசனைக்குழு
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

செல்வி. சே. ஸ்ரீ லோஷினி
பொறுப்பாளர், பாடத்திட்டம் மதிப்பீடு மற்றும் கல்வி ஆலோசனைக்குழு
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்

செல்வி. பா. தி. சிந்துஜா
பொறுப்பாளர், தரவு மற்றும் நிகழ்வு மேலாண்மை
வாகை தமிழ்ச்சங்கம், நாமக்கல்
உத்தேச கல்வி கால அட்டவணை
மாணவர்களின் சீரான கல்விப் பயணத்திற்காக வகுக்கப்பட்ட தற்காலிகக் கல்வி அட்டவணை.