‘தமிழ் எங்கள் மூச்சு என்று சங்கே முழங்கு! இன்பத்தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்!’ என்று தமிழால் இணைந்த குடும்பம் இது. பரந்து விரிந்த இந்த உலகத்தில் தமிழுக்குத் தொண்டு செய்ய விரும்புபவர்களைத், தமிழில் சாதனை செய்ய விரும்பவர்களின் தனித்திறன்களை வெளிகொணர்ந்து, அவர்களை எங்களுடன் கைகோர்க்கச் செய்வதே எங்களின் நோக்கம்.
இவ்வமைப்பின் மூலம் நடைபெறும் பணிகளின் விவரங்கள் :-
"குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்"
உலகின் மூத்த மொழியாம் தமிழின் பல்வேறு பரிமாணங்களை இன்றைய இளம் தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் ஒரு ஏணியாய் மழலையர் மன்றம் செயல்பட்டு வருகிறது. வாகை மழலையர் மன்றச் செயல்பாடுகளில் மழலையர் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தமிழானது வாக்கிலும் மனத்திலும் இருந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது வாகை மழலையர் மன்றம். மழலையர் மன்றத்தின் செயல்பாடுகள் பின்வருமாறு:
உலகப் பொதுமறையாய் விளங்கும் திருக்குறளை, மழலையர்கள் அறிந்திட வேண்டும் என்ற நோக்கில் நாளும் இரண்டு திருக்குறள்கள் என, நாள்தோறும் பதிவிட்டு வருகிறோம். இதன் மூலம் மழலையர்கள் வாசிப்பு மற்றும் வாழ்வின் அறநெறிகளைப் புரிந்துகொள்ளும் திறனை பெறுகின்றனர்.
வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கதை ஞாயிறு நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் நீதிக் கதைகளும் வாழ்வியல் கதைகளும் மழலைகளிடம் பகிரப்பட்டுப், பின்னர் அவற்றின் மீதான வினாக்கள் தொடுக்கப்பட்டுக் குழந்தைகளிடம் கதைக்கேட்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நிகழ்வு நடத்தப்படுகிறது. இதன் மூலம் மழலையர்களின் கேட்டல் திறனும் சிந்தித்து ஆராயும் திறனும் வலுவடைகிறது.
மாதத்தில் இருக்கும் சிறப்பு நாள்கள் மற்றும் அறிஞர்களின் பிறந்தநாள்களைக் கொண்டாடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் மாதாந்திர நிகழ்வு நடத்தப்படுகிறது. இதில் மாதம் ஒரு தலைப்பு வழங்கப்படும். அத்தலைப்பில் கவிதைகள், கட்டுரை, பேச்சுப்போட்டி, கைவினைத்திறன் மற்றும் ஓவியப்போட்டி எனப் பலப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இவற்றின் மூலம் மழலையர்களின் பேச்சுத்திறன், கற்பனைத்திறன், அவையஞ்சாமை, ஓவியத்திறன், கவிதை இயற்றும் திறன் ஆகியவை வளரும். மேலும் அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக மாத இறுதியில் நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவருக்கும் மின் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மழலையர்கள் செயல்வழிக் கற்றல் திறன் மட்டுமின்றி அவர்களின் சிந்தனைத் திறனையும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் தினந்தோறும் மாலை விடுகதைகளும் வினாக்களும் கேட்கப்பட்டு அவர்களின் சிந்தனைத் திறன் ஊக்குவிக்கப்படுகிறது.
"மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்று பெண்மையைப் போற்றிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை வழியில், பெண்களுக்கென தனியாக அவர்களின் தனித்திறனை வெளிக்கொணரும் பொருட்டும், தமிழ்த்திறனை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டதே வாகை மகளிர் மன்றம்.
நாள்தோறும் காலை வேளையில் கோலம் போடும் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ’வாகை கோலப்பகிர்வுகள்’ நடத்தப்படுகிறது, மேலும் ’நாளும் ஒரு புத்தகம் அறிவோம்’ எனும் பொருண்மையில் புத்தகங்களும் பகிரப்பட்டு மகளிரின் கற்றல் திறன்களையும் ஊக்குவித்து வருகிறது இம்மன்றம்.
வீட்டில் நடப்பது மட்டுமல்ல, நாட்டில் நடக்கும் அனைத்துவித நிகழ்வுகளையும், முக்கியச் செய்திகளையும் பெண்கள் தெரிந்திருத்தல் அவசியம். அதனை அனைவரிடமும் கொண்டுசேர்க்கும் வகையில் 'நாட்டுநடப்பு' எனும் செய்திப்பகிர்வின் மூலம் விழிப்புணர்வு செய்திகள், முக்கிய நிகழ்வுகள், பயனுள்ள தகவல்கள் ஆகியன பகிரப்படுகின்றன.
மேலும் மாலை வேளைகளில், மனத்திற்கு இதமளிக்கும் வகையில், ‘உங்களுக்கு தெரியுமா?’ எனும் பகிர்வில் அரசிடம் இருந்து பெறக்கூடிய பலப் பயனுள்ள தகவல்களும் அரசின் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துவது எனப் பலத் திறன்வளர் செயல்களையும் செய்து வருகிறது இம்மகளிர் மன்றம்.
புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துதல், தமிழில் இருக்கும் எண்ணிலடங்காப் புதையல்களான இலக்கியங்களை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்தல், இலக்கியங்களைக் கதை, நாடகங்கள் மூலமாக இளம் மாணவர்களிடம் இலக்கிய வாசிப்பை ஏற்படுத்துதல், இலக்கியங்கள், புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் மூலமாக தன்னம்பிக்கையை அதிகப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே வாகை பனுவல் மன்றம்.
ஒவ்வொரு மாதமும் புத்தகங்கள் பகிரப்பட்டு, அவற்றின் மீதான எண்ண ஓட்டங்களைப் பங்கேற்பாளர்கள் அவர்களின் தரப்பில் வெளிக்கொணரும் வகையில் பனுவல் மன்ற கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. தொடர்ந்து புத்தகமதிப்புரை வழங்கிவரும் தமிழ்ச்சான்றோர்களுக்கும் தமிழார்வலர்களுக்கும் ‘பனுவல் இரத்னா’ விருது வழங்கப்படுகிறது.